பாகிஸ்தானின் சியால்கோட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பொறியியலாளர் பிரியந்த குமாரவின் மனைவி, கொல்லப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பாகிஸ்தான் மற்றும் இலங்கைத் தலைவர்களிடம் மன்றாடியுள்ளார்.
“எனது கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை செய்தியில் இருந்து அறிந்தேன், பின்னர் இதை இணையத்திலும் பார்த்தேன். அவர் மிகவும் அப்பாவி மனிதர்,” என்று அவர் பிபிசி சிங்கள செய்தியாளர்களிடம் பேசினார்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் எனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு நீதி வழங்குமாறு இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலைவர்களை நான் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று கணேமுல்லையில் உள்ள பிரியந்த குமாரவின் இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான பிரியந்த குமார 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வேலைவாய்ப்பிற்காகச் சென்றிருந்ததோடு, 2012ஆம் ஆண்டு முதல் மேற்படி சியால்கோட் தொழிற்சாலையின் முகாமையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இதேவேளை, பிரியந்த குமாரவின் அஸ்தியை திங்கட்கிழமை லாகூரில் இருந்து கொழும்புக்கு விசேட விமானம் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.